கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் காவேரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நான்காவது நபரான மகிமா தாஸ் என்பவர், பாதுகாப்பு கோரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
சம்பவத்தன்று அதிகாலை மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, வனத்துறை ஊழியர்கள் தங்களை நோக்கித் திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்த வீடியோவில் அவர் குற்றம்சாட்டியுள்ளார். துப்பாக்கிச் சூட்டின் அதிர்ச்சியில் தான் மலையிலிருந்து கீழே ஓடித் தப்பியதாகவும், தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்துத் தன்னிடம் விசாரணை நடத்த வனத்துறையினர் தன்னைத் தேடி வரக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் காவல்துறை உடனடியாகத் தலையிட்டுத் தனக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் போன கால்நடைகளைத் தேடிச் சென்றபோது இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்ததாகக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், வேட்டைத் தடுப்பு நடவடிக்கையின் போது தற்காப்பிற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஏற்கனவே காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிர் தப்பிய சாட்சியான மகிமா தாஸின் இந்த வீடியோ பதிவு இவழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.