Posted in

15வது மாடியில் இருந்து விழுந்து 5 வயது சிறுவன் பலி; வெளியான அதிர்ச்சி ஆடியோ பதிவு!

கிழக்கு லண்டனின் பிளேஸ்டோவ் (Plaistow) பகுதியில் உள்ள 15 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறை ஜன்னலில் இருந்து கீழே விழுந்து, ஆலிம் அகமது (Aalim Ahmed) என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்தில் (Coroner’s Court) அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவன் கீழே விழுவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு “3, 2, 1” என எண்ணும் ஆடியோ பதிவு நீதிமன்றத்தில் திரையிடப்பட்டபோது, அங்கிருந்தவர்கள் நிலைகுலைந்து போயினர்.

ஆட்டிசம் பாதிப்பு கொண்ட அந்தச் சிறுவன், ஆபத்தின் வீரியத்தைப் அறியாமல் விளையாட்டாகக் குதித்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டிடத்தின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவான அந்த ஆடியோவில், குழந்தை எண்ணும் குரலுக்குப் பிறகு பலத்த சத்தம் கேட்பதும், அதைத் தொடர்ந்து “ஆலிம்” என்று அவரது 3 வயது சகோதரன் அலறும் குரலும் பதிவாகியுள்ளது.

சிறுவனின் தாய் சஹ்ரா உஸ்மான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்தக் குடியிருப்பில் உள்ள ஜன்னல்கள் பழுதடைந்து காணப்பட்டதாகவும், ஜன்னல் தடுப்பான்கள் (Window Restrictors) சரியாக இயங்கவில்லை என்று உள்ளாட்சி நிர்வாகமான நியூஹாம் கவுன்சிலிடம் (Newham Council) பலமுறை புகார் அளித்தும் சீரமைக்கப்படவில்லை என்றும் கண்ணீருடன் குற்றம்சாட்டினார். சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுக்க முயன்றபோது இந்தத் துயரம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுவன் தவறி விழுந்ததில் எவ்விதச் சந்தேகத்திற்கிடமான பின்னணியோ அல்லது பிறரின் தலையீடோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முறையான பராமரிப்பு இல்லாத ஜன்னல்களே இந்த பிஞ்சு உயிரின் பலிக்குக் காரணம் என பெற்றோர் சாடி வருவது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.