அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் (Delta Air Lines) விமானம் தரையிறங்கியபோது, இருக்கை வார்ப்பட்டை (Seatbelt) பழுதடைந்து உடைந்ததால், பயணி ஒருவர் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த டேரின் ராத் (Darrin Roth) என்ற அந்தப் பயணி, இந்த எதிர்பாராத விபத்தைத் தொடர்ந்து தனக்கு மாரடைப்பு மற்றும் கடுமையான முதுகெலும்பு பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறி டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2025 ஜனவரியில் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, விமானம் தரையிறங்கும் தீவிர வேகத்தில் இருக்கை வார்ப்பட்டை சரியாகப் பூட்டிக்கொள்ளாமல் விலகியதால், டேரின் ராத் தூக்கி வீசப்பட்டு முன்னால் இருந்த தடுப்புச் சுவரில் (Bulkhead) பலமாக மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நினைவிழந்த அவரை, விமானப் பணியாளர்கள் ஸ்ட்ரெச்சர் மூலமாக அவசர அவசரமாக இறக்கி நியூயார்க் மருத்துவமனையில் அனுமதித்தனர். விமானப் பணிப்பெண்கள் சோதனையிட்டபோது, அந்தச் சீட்பெல்ட் தவறாகப் பொருத்தப்பட்டிருந்ததோ அல்லது முறுக்கிக்கொண்டிருந்ததோ கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கோர விபத்து நடந்த சில வாரங்களிலேயே டேரின் ராத்திற்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டதால், அவருக்கு 4 ரத்த நாளங்களைச் சீரமைக்கும் ‘குவாட்ருபிள் பைபாஸ்’ (Quadruple Bypass) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், கழுத்து மற்றும் முதுகெலும்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 2025 நவம்பரில் மற்றொரு முக்கியச் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட பலத்தக் காயமும் அதிர்ச்சியுமே தனது உடல்நலக் குறைவிற்குக் காரணம் எனக் குறிப்பிட்டு அவர் நஷ்டஈடு கோரியுள்ளார்.
விமானப் பராமரிப்பில் அலட்சியமாகச் செயல்பட்டதே இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்குக் காரணம் எனப் பாதிக்கப்பட்ட பயணி குற்றம்சாட்டியுள்ள நிலையில், டெல்டா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சர்வதேச விமான நிறுவனத்தில் அரங்கேறிய இந்தச் சம்பவம், வான்வழிப் பயணிகள் மத்தியில் பெரும் பாதுகாப்பின்மையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.