Posted in

ஐபோன் தவணை செலுத்தாததால் வெடித்த மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மலை உச்சியிலிருந்து விழுந்து பரிதாப பலி!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள திஸ்கான் பகுதிக்கு உட்பட்ட கவ்டா மலைப் பகுதியில், நெஞ்சை பதறவைக்கும் வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்ந்த ஐபோன் (iPhone) ஒன்றைத் தவணை முறையில் (EMI) வாங்கிய 18 வயது இளைஞர் குணால், அதற்கான மாதாந்திர தவணை தொகையைச் செலுத்துமாறு தனது தந்தையிடம் வலியுறுத்தியுள்ளார். இதில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது இறுதியாகத் தற்கொலை முயற்சியில் முடிந்து மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் தந்தை முரளிதர் சந்த்வாடே, மகனின் கோரிக்கையை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த குணால், உடனடியாக அருகில் உள்ள மலை உச்சிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மகனைக் காப்பாற்றுவதற்காகப் பெற்றோரான முரளிதரும், தாய் சங்கீதாவும் உடனடியாக மலைப்பகுதிக்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்துத் தகவலறிந்த உள்ளூர் பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இளைஞரைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

தவறான முடிவை எடுக்க வேண்டாம் என அனைவரும் கெஞ்சியபோதிலும், இளைஞர் குணால் மலையின் விளிம்பிலேயே நின்றுகொண்டு அடம் பிடித்துள்ளார். நிலைமை கையை மீறிச் சென்றதால், தந்தை முரளிதர் மெதுவாக மகனை நெருங்கி அவரைப் பிடித்துக் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவரும் நிலைதடுமாறி சுமார் 300 அடி உயரமுள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் கீழே விழுந்தனர். தன் கண் முன்னேயே கணவனும் மகனும் கீழே விழுந்து பலியாவதைக் கண்டு உறைந்துபோன தாய் சங்கீதா, கதறி அழுதபடியே அதே இடத்தில் மலையிலிருந்து கீழே குதித்துள்ளார்.

இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் உடனடியாகப் பள்ளத்தாக்கிற்குள் இறங்கி அவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடம்பரப் பொருட்களுக்காக இளைஞர்கள் தவறான முடிவுகளை எடுப்பதும், அதைக் தடுக்க முயலும் குடும்பங்கள் அழியும் நிகழ்வுகளும் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.