Posted in

சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தவெகவின் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தைக் கடுமையாகக் விமர்சித்துப் பேசியுள்ளார். “காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேரவையில் திமுக கேள்வி எழுப்பினால் பதில் சொல்வதில்லை. இவர்கள் சர்க்கார் நடத்துகிறார்களா இல்லை சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா என்றே தெரியவில்லை” என்று அவர் காரசாரமாகச் சாடியுள்ளார்.

விவசாய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யவும் வறட்சி நிவாரணம் வழங்கவும் அரசிடம் நிதி இல்லை என்று கூறும் தவெக நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய இலவசக் கார்கள் வாங்க மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதையே இந்த அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சனைகளுக்குச் சட்டப்பேரவையில் பதில் அளிக்கத் தயங்கும் தவெக அரசு, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்குப் பயந்து திசைதிருப்பும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுகிறது என்றார். “கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயந்தவன் கிடையாது இந்த உதயநிதி. விவசாயிகள் மற்றும் மக்களின் நலனுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாகவே தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீது முன்வைத்து வரும் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசார விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.