சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் பணியாளர்கள், இன்று தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையினரால் அதிரடியாகக் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டபடி, தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் மற்றும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே தூய்மைப் பணியாளர்களின் பிரதான கோரிக்கையாகும். இது தொடர்பாக இன்று காலை ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லப் பணியாளர்கள் தீர்மானித்தனர்.
முதலில் பெரம்பூரில் உள்ள முதலமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதால், பணியாளர்கள் தங்களது போராட்ட இடத்தைத் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்திற்கு உடனடியாக மாற்றி உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அங்கேயும் திரண்ட நூற்றுக்கணக்கானத் தூய்மைப் பணியாளர்களைப் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக வலுக்கட்டாயமாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இந்த அதிரடி கைது நடவடிக்கையால் தண்டையார்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் கடுமையான பதற்றமும் சலசலப்பும் நிலவியது.