ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினின் கால் நூற்றாண்டு கால ஆட்சிக்குப் பிறகு, கிரெம்ளின் அரியணையைக் கைப்பற்றப் போவது யார் என்ற கேள்வி சர்வதேச அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது. அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் முன்னாள் கேஜிபி (KGB) அமைப்பின் வாரிசுகளான எஃப்எஸ்பி (FSB) உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் ராணுவப் படைகள் பின்னணியில் இருந்து அதிகாரப் போட்டியிவ் ஈடுபட்டு வருகின்றன.
புடினின் நம்பிக்கைக்குரிய ‘சிலோவிகி’ (Siloviki) எனப்படும் பாதுகாப்பு மற்றும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், ஆட்சியின் அஸ்திவாரமாக விளங்குகின்றனர். முன்னாள் எஃப்எஸ்பி தலைவரும் பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய புள்ளியுமான நிகோலாய் பத்ருஷேவ், மற்றும் அவரது மகனும் தற்போதைய துணைப் பிரதமருமான டிமிட்ரி பத்ருஷேவ் போன்ற வாரிசுகள் அரியணையை நோக்கி முன்னிலையில் நிறுத்தப்படுகின்றனர்.
மற்றொரு புறம், வாக்னர் குழுவின் வீழ்ச்சிக்குப் பிறகும், ரஷ்யாவின் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்களால் (Oligarchs) பராமரிக்கப்படும் நிழல் உலக தனியார் ராணுவப் படைகள் (Private Military Companies) நாட்டில் தங்களின் செல்வாக்கை அதிகரித்து வருகின்றன. புடினுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், முறையான தேர்தல் பாதையை விட இத்தகைய ஆயுதம் தாங்கிய நிழல் படைகளின் ஆதரவைப் பெறும் குழுவே நாட்டின் புதிய ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் எனக் கருதப்படுகிறது.
ரஷ்ய அரசியலமைப்புச் சட்டப்படி பிரதமராக இருக்கும் மிக்கைல் மிஷுஸ்டின் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்க வாய்ப்பிருந்தாலும், பின்னணியில் உளவுத்துறை அமைப்புகளுக்கும் தனியார்ப் படைகளுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியே கிரெம்ளின் அரியணையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.