Posted in

இம்ரான் கான் மருத்துவ சிகிச்சைக்காக உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒன்றுபட்டனர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் 1992-ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான் கான் (73), கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்துச் சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்சர்க்கார் மற்றும் அர்ஜுனா ரணதுங்கா உட்பட உலகப் புகழ்பெற்ற 21 சர்வதேச அணியின் முன்னாள் கேப்டன்கள் மூலம் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிற்கு இணைந்து அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையிலான அணுகுமுறையும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி முறையான மருத்துவப் பரிசோதனைகளும் வழங்கப்பட வேண்டும் என அந்த முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்பு 14 முன்னாள் கேப்டன்கள் இதுதொடர்பாகக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது மேலும் 7 கேப்டன்கள் இணைந்து இக்கோரிக்கையை மீண்டுமொருமுறை வலுவாக முன்வைத்துள்ளனர்.

இம்ரான் கானை மருத்துவமனையில் அனுமதித்து அவரது சொந்த மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் முழுமையானப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாகக் கானின் வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர்கள், அவருக்குத் தடையற்ற குடும்பச் சந்திப்புகளையும், பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

நாங்கள் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலிலோ அல்லது சட்ட நடவடிக்கைகளிலோ தலையிட விரும்பவில்லை; மாறாக விளையாட்டுத் துறையில் இணைந்தப் பழைய சகாக்கள் என்ற அடிப்படையிலும் மனிதநேய உணர்வோடுமே இக்கோரிக்கையை வைக்கிறோம் என 21 கேப்டன்களும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பலர் இணைந்து விடுத்துள்ள இந்த வேண்டுகோள், சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு அரசியல் மற்றும் மனித உரிமைகள் ரீதியிலான பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.