Posted in

குதிரை பேர வழக்கில் இன்று திருப்புமுனை? – உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதித் தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் கட்சி மாறி வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் போலிஸ் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையை மாநிலக் காவல்துறையினர் மேற்கண்டால் நியாயமான விசாரணை நடைபெறாது என்றும், வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு (CBI) மாற்றக் கோரியும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, திருவல்லிக்கேணி காவல்துறையினரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவு காரணமாகக் காவல்துறையின் முதற்கட்ட புலன் விசாரணை முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழக அரசு, குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு தடையை உடனடியாக நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.விசாரணையை மாநில அதிகார வரம்பிற்குள்ளேயே தொடர அனுமதிப்பதே சரியான சட்ட நடைமுறையாக இருக்கும் எனத் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு முன் இன்று இந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை நீக்கப்படுமா அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.