Posted in

₹20,000 கோடி பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது – தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் இந்த சுவமோட்டோ அறிவிப்பை வெளியிட்ட அவர், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதையும் ஆயிரக்கணக்கான வீடுகள் அகற்றப்படுவதையும் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்த தொடர் போராட்டங்களுக்கு செவிசாய்க்கும் விதமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் தவெக தலைவராக போராட்டக் களத்திற்கு நேரில் சென்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், “விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு; அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது” என்பதைத் தமது அரசு கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், சென்னையின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, புதிய மாற்று இடங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், நிபுணர் குழுவின் தொழில்நுட்ப ஆய்வுப் அறிக்கை அடிப்படையில் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பில்லாத புதிய இடம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமையும் வரை தற்காலிக தீர்வாக, சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய டெர்மினல் 5 (Terminal 5) அமைத்து அதன் கொள்ளளவை 5.5 கோடி பயணிகளாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இத்திட்டம் ரத்து செய்யப்படுவதால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டும் வேளையில், பரந்தூர் பகுதி கிராம மக்கள் முதலமைச்சரின் இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர்.