சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி ‘உழைப்போர் உரிமை இயக்கம்’ சார்பில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 8-வது நாளாகத் தீவிரமடைந்துள்ள இந்தப் போராட்டத்தில், நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றுத் தங்களது நியாயமான உரிமைகளுக்காகக் குரல் எழுப்பி வருவதால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினசரி ஊதியத்தை ₹832 ஆக உயர்த்த வேண்டும், வாராந்திர ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்புச் சலுகைகளை வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான அடிப்படை கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் தங்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பியதாகவும், ஆனால் பல நாட்கள் கடந்தும் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். “நாங்கள் எழுப்பும் நியாயமான குரல் இன்னும் முதல்வரின் காதுகளுக்குச் சென்றடையவில்லையா? எங்களைச் சந்தித்துக் கோரிக்கைகளைக் கேட்கக் கூட அதிகாரிகள் மறுப்பது ஏன்?” என்று அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாநகராட்சி ஆணையர் தரப்பில் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், கொள்கை ரீதியிலான முடிவுகளுக்குப் பின்னரே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முதலமைச்சர் தங்களை நேரில் சந்தித்துத் தகுந்த தீர்வு காணும் வரை அல்லது தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும், தேவைப்பட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தத் தயார் என்றும் தூய்மைப் பணியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.