Posted in

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்…….

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் (Mandatory Biometric Update – MBU) சேவைக்கான கட்டண விலக்கு சலுகை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கைரேகை மற்றும் கருவிழிப் பதிவு இன்றி ‘பால் ஆதார்’ (Baal Aadhaar) வழங்கப்படும் நிலையில், அவர்கள் 5 வயதைக் கடக்கும் போதும், பின்னர் 15 வயதைப் பூர்த்தி செய்யும் போதும் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும்.
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து சுமார் 1.56 லட்சம் பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி இதுவரை 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துள்ளது. இந்தச் சிறப்பு இயக்கத்தின் கீழ் கைவிரல் ரேகைகள், கருவிழிப் படல ஸ்கேன் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவை ஆதாரில் புதிதாகப் பதிவு செய்யப்படுகின்றன.
குழந்தைகளின் ஆதாார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களைச் சரியாகப் புதுப்பித்து வைப்பது, அவர்கள் உயர்கல்விச் சேர்க்கை பெறும் போதும், NEET, JEE, CUET போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போதும் எவ்வித அடையாளச் சிக்கல்களும் எழாமல் இருக்க உதவும். மேலும், அரசின் கல்வி உதவித்தொகை (Scholarship) மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் தடையின்றி நேரடி பணப்பரிமாற்றம் மூலம் கிடைப்பதற்கும் இந்த அப்டேட் அவசியமாகும்.
செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகு இந்தக் கட்டாயப் புதுப்பித்தலுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், பெற்றோர்கள் தங்கள் அருகாமையில் உள்ள ஆதார் சேவை மையங்கள் அல்லது தபாலகங்களை அணுகித் தாமதமின்றிப் பயோமெட்ரிக் அப்டேட்டை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ‘புவன் ஆதார்’ (Bhuvan Aadhaar) இணையதளம் மூலம் அருகிலுள்ள சேவை மையங்களின் முகவரியைக் கண்டறிந்து பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.