பிரிட்டனின் பர்மிங்ஹாம் (Birmingham) நகரம் கடுமையான வெப்ப அலைக்குக்குப் பிறகு, எதிர்பாராத விதமாகத் தாக்கிய இடி மின்னலுடன் கூடிய பயங்கரக் கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ளது. நகரின் முக்கியச் சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிப் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து வானிலை ஆய்வு மையமான ‘மெட் ஆபீஸ்’ (Met Office) தனது இடி மின்னல் மற்றும் கனமழைக்கான ‘மஞ்சள் எச்சரிக்கையை’ (Yellow Thunderstorm Warning) நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
திடீரெனப் பெய்த பலத்த மழையால் பர்மிங்ஹாம் நகரின் கர்ஃபார் ரோடு (Curbar Road), தோர்ன்பிரிட்ஜ் அவென்யூ (Thornbridge Avenue) போன்ற பல முக்கியப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, ஏராளமான கார்கள் நீரில் மூழ்கின. வீடுகளுக்குள் களிமண் கலந்த நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ளப் பெருக்கு காரணமாகத் தீயணைப்புப் படையினரும் உள்ளூர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
வானிலை மையத்தின் கணிப்பின்படி, 12 மணி நேரக் காலக்கட்டத்தில் 75 மி.மீ (3 அங்குலம்) வரை மழை பெய்யக்கூடும் என்றும், இதனுடன் ஆலங்கட்டி மழை மற்றும் சக்திவாய்ந்த மின்னல் தாக்குதல்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் 80-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை அபாயம் நீடிப்பதால், பொதுமக்கள் அனைவரும் அவசரகாலக் கருவிகள் (Emergency Flood Kits) மற்றும் முதலுதவிப் பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மின்சாரத் தடை மற்றும் ரயில்-பேருந்து சேவைகளில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பர்மிங்ஹாம் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நீடித்த வெப்பமான காலநிலைக்குப் பிறகு, இத்தகைய வளிமண்டலக் மேலடுக்குச் சுழற்சியால் உருவான திடீர் மழை, காலநிலையின் தீவிர மாற்றத்தையே வெளிப்படுத்துவதாகச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.