Posted in

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? தேசிய ரேஸில் 3-வது இடத்தைப் பிடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்த விஜய்!

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் வகையில் ‘இந்தியா டுடே – சி-வோட்டர்’ (India Today – CVoter) இணைந்து நடத்திய நாட்டின் மிகப்பெரிய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் 3-வது இடத்தைப் பிடித்து தேசிய அரசியலில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தக் கருத்துக்கணிப்பின் படி, நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என 48.7% மக்களும், ராகுல் காந்திக்கு 27.1% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், மாநில அரசியலில் காலடி எடுத்து வைத்து குறுகிய காலத்திலேயே தேசிய அளவிலான இந்த ரேஸில் 9.2% ஆதரவைப் பெற்று 3-வது இடத்தை விஜய் கைப்பற்றியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரங்களையே உற்றுநோக்க வைத்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (2%), சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (1.7%) மற்றும் ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் (1.2%) போன்ற பல மூத்த தேசியத் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி விஜய் இந்த இடத்தை எட்டியுள்ளார். மேலும், ‘எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தத் தகுதியான தலைவர் யார்?’ என்ற கேள்வியிலும் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக 12.2% வாக்குகளுடன் விஜய் 2-வது இடத்தைப் பிடித்துள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர், ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தேசிய அளவில் இத்தகைய செல்வாக்கைப் பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜயை பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் எனத் தவெக நிர்வாகிகள் பேசி வந்த நிலையில், இந்த சர்வே முடிவுகள் அவர்களின் கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.