மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் (Guatemala) உள்ள பயன்படுத்தப்படாத புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இருந்த ஆபத்தான ரேடியோ ஆக்டிவ் பொருளை, பயங்கரவாதிகள் திருடிச் சென்று ‘டர்ட்டி பாம்’ (Dirty Bomb) எனப்படும் கதிர்வீச்சு வெடிகுண்டை உருவாக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அமெரிக்கா அங்கிருந்து அவசரமாக அகற்றியுள்ளது. அமெரிக்கத் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (NNSA) மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைப்பு முகமை (DTRA) இணைந்து இந்த இரகசிய மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளன.
புற்றுநோய் சிகிச்சைக் கருவிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ‘கோபால்ட்-60’ (Cobalt-60) என்ற உயர் கதிர்வீச்சுப் பொருள்தான் குவாத்தமாலாவில் உள்ள மருத்துவக் கிடங்கில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்துள்ளது. இந்த ஆபத்தான கதிர்வீச்சுப் பொருள் தீவிரவாதக் குழுக்களின் கைகளில் கிடைத்தால், அதைக் சாதாரண வெடிமருந்துகளுடன் சேர்த்து வெடிக்கச் செய்து மிகப்பெரிய கதிர்வீச்சுப் பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பதால், அமெரிக்கக் தாயகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அது பாதுகாப்பாகப் பேக் செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய NNSA துணைப் பொறுப்பாளர் மேத்யூ நெபோலி, “இந்த ஆபத்தான பொருளை வெற்றிகரமாகக் அகற்றியிருப்பது அமெரிக்க தாயகப் பாதுகாப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” எனக் குறிப்பிட்டார். மேலும் குவாத்தமாலின் ஆற்றல் மற்றும் சுரங்க அமைச்சகமும், உள்ளூர் பாதுகாப்புப் படைகளும் இந்த மீட்பு நடவடிக்கைக்கும், அதை அமெரிக்காவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத கதிர்வீச்சுச் சாதனங்கள் மூலமாகப் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் சூழலில், அமெரிக்கா தனது உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச அளவில் இத்தகைய தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குவாத்தமாலாவில் இருந்து அகற்றப்பட்ட இந்த கோபால்ட்-60 பொருள் தற்போது அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பான அணுசக்தி மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.