Posted in

திராவிட பாரம்பரியத்தால் தான் 11.19% வளர்ச்சி: சட்டசபையில் ஆளுங்கட்சியைப் புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திராவிட இயக்கப் பாரம்பரியம் மற்றும் திமுக அரசின் பொருளாதார சாதனை குறித்து முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆவேசமாகப் பேசி ஆதரவுத் தளத்தை அமைத்தது அவையில் பெரும் புயலையும் கவனத்தையும் கிளப்பியுள்ளது.
பேரவையில் உரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம், எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் “திராவிட மாடல் மற்றும் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து என்ன செய்தீர்கள்?” எனக் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். எதிர்கட்சியினரின் இந்த வினாக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், திராவிடக் கொள்கைகளின் வழிவந்த ஆட்சியினாலே தமிழ்நாடு இன்று இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என ஆணித்தரமாக வாதிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் கீழ் மாநிலம் எட்டியுள்ள வளர்ச்சிப் பாதையை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 11.19 சதவீதத்தை எட்டியுள்ளது என்பதைப் பெருமையுடன் பதிவு செய்தார். இந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு அடைந்துள்ள இந்த அபார வளர்ச்சிக்குத் திராவிடப் பாரம்பரியத்தின் தொலைநோக்குத் திட்டங்களே அடித்தளம் என்பதைப் பணிவோடு பேரவையில் பதிவு செய்ய விரும்புவதாகக் கூறினார்.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு ஓ. பன்னீர்செல்வம் திராவிட மாடல் ஆட்சியையும் அதன் பொருளாதார சாதனைகளையும் ஆவேசமாக நியாயப்படுத்திப் பேசியது, பேரவையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தையும் பலத்த சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதேவேளையில், அதிமுக உறுப்பினர்கள் ஓபிஎஸ்ஸின் இந்த நிலைப்ப்பாட்டிற்குத் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்ய, அவையில் காரசாரமான விவாதம் அரங்கேறியது.