சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நிர்வாகி அன்பழகன் (எ) மைனாக்குட்டி பட்டப்பகலில் மர்மக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, அன்பழகன் திருநீர்மலை பிரதான சாலையில் உள்ள கட்சி மன்றக் கட்டிடத்தில் தனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் மதிய உணவிற்காக வெளியே சென்ற தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட 4 முதல் 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்மக் கும்பல், கத்திகளுடன் கட்டிடத்திற்குள் புகுந்து அன்பழகனைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர், அன்பழகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள காவல் துறையினர், இந்தச் சம்பவம் முன்விரோதம் காரணமாகவே நடைபெற்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகள் தப்பிச் சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் தாம்பரம் காவல்துறையினர், 5 தனிப்படைகள் மூலமாகத் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இக்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து திருநீர்மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டு நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.