Posted in

தனிப்பட்ட அரசியலுக்காகத் தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கக் கூடாது: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் தொழில்வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தக்கூடிய பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதில் அரசு ஆர்வம் காட்டுவது, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முடக்கும் செயல் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக முதல்வர் சி. ஜோசப் விஜய் மாநிலத்தின் தொழில்வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நயினார் நாகேந்திரன், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் போன்ற பெரும் தொழில் மண்டலங்களை இணைக்கும் வகையில் அமைந்த பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதுதான் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார். விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைக் காரணம் காட்டி பரந்தூர் திட்டத்தை நிராகரிக்கும் அரசு, ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் போதும் அதே விவசாய நிலங்களையே கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்பதை ஏன் உணர்வதில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல” அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நிறைந்த பரந்தூரை ஓரங்கட்டிவிட்டு, ஓசூரில் தான் விமான நிலையம் அமைப்போம் எனத் தொழிற்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் சபதம் எடுப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவதில் பிரச்சனையா அல்லது தமிழகத்திற்குப் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சனையா என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ள பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசியல் வீம்பிற்காகக் கைவிடுவது, தமிழகத்திற்கு வரவிருக்கும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளைப் பாதிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து பரந்தூர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.