Posted in

நிஜ உலகில் ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’: தாய்லாந்து மலைகளில் புதிய ஓணான் வகை கண்டுபிடிப்பு!

பிரபலமான ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ (House of the Dragon) வெப் தொடரில் வரும் டிராகன் போன்ற தோற்றமளிக்கும் புதிய வகை உடும்பு (Lizard) இனத்தைச் சர்வதேச விஞ்ஞாணிகள் குழு தாய்லாந்து நாட்டின் அடர்ந்த மலைப் பகுதிகளில் கண்டுபிடித்துள்ளது. மேற்கு தாய்லாந்தில் உள்ள மே வோங் தேசியப் பூங்காவின் (Mae Wong National Park) 1,300 மீட்டருக்கும் அதிகமான உயரமான மலைக்காடுகளில் இந்த அரிதான உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சிறிய உடும்பிற்கு ‘அகாந்தோசோரா சைராக்ஸ்’ (Acanthosaura syrax) என அறிவியல் ரீதியாகப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் வரும் ‘சைராக்ஸ்’ (Syrax) என்ற டிராகனின் மஞ்சள் கலந்த பச்சை நிறம், சிறிய உடல் அமைப்பு மற்றும் அதிக அளவில் முட்டையிடும் திறன் ஆகிய குணங்கள் இந்த உடும்பிற்கும் பொருந்துவதால், ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பெயரையே தேர்வு செய்துள்ளனர்.
மரங்களில் வாழக்கூடிய இந்த ‘மலைக் கொம்பு டிராகன்’ (Mountain Horned Dragon) வகையைச் சேர்ந்த உடும்பின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் கூர்மையான முள் போன்ற அமைப்புகள் உள்ளன. மரபணுப் பரிசோதனைகள் (DNA Testing) மற்றும் வெளிப்புறத் தோற்ற அமைப்புகள் மூலம் இது முற்றிலும் புதிய மற்றும் தனித்துவமான ஒரு உயிரினம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் ‘அகாந்தோசோரா’ பேரினத்தில் கண்டறியப்பட்ட உடும்புகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மிகக் குறைந்த பரப்பளவில் மட்டுமே வாழும் இந்த அரியவகை உடும்புகள் காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்பால் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படாமல் இருக்க, தாய்லாந்தின் மலைக் காடுகளைப் பாதுகாப்பது மிக அவசியம் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.