Posted in

டொனால்ட் டிரம்ப் முக வடிவிலான போதை மாத்திரைகளுக்கு நெதர்லாந்து ‘Red Alertட்’!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முக வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ‘எக்ஸ்டசி’ (Ecstasy) போதை மாத்திரைகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என நெதர்லாந்தின் முன்னணி போதைப்பொருள் மற்றும் மனநல ஆராய்ச்சி நிறுவனமான ‘ட்ரிம்போஸ் இன்ஸ்டிடியூட்’ (Trimbos Institute) எச்சரித்துள்ளது.

இந்த மாத்திரைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ‘ரெட் அலர்ட்’ (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, “இந்த மாத்திரைகளை எக்காரணம் கொண்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது” எனப் பகிரங்கமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உலா வரும் இந்த மாத்திரைகளின் ஒரு புறத்தில் டொனால்ட் டிரம்பின் முக அமைப்பும், மறுபுறத்தில் ‘NL’ மற்றும் ‘Trump’ என்ற எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. சோதனை மையங்களில் ஆய்வு செய்யப்பட்ட இந்த மாத்திரைகளில் ‘பி.எம்.எம்.ஏ’ (PMMA – para-methoxymethamphetamine) என்ற வீரியமிக்க அபாயகரமான வேதிப்பொருள் அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது வழக்கமான எக்ஸ்டசி மாத்திரைகளில் உள்ள ‘எம்.டி.எம்.ஏ’ (MDMA) பொருளை விடப் பல மடங்கு ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சாதாரண போதை மாத்திரைகளை விட இந்த ‘பி.எம்.எம்.ஏ’ வேதிப்பொருள் மனித உடலில் தாமதமாகவே வேலையைக் காட்டத் தொடங்கும்.

இதனால் போதை ஏறவில்லை என நினைத்து பயனர்கள் அடுத்தடுத்த மாத்திரைகளை உட்கொள்ள நேரிடும் என்றும், அது உடலில் அளவுக்கு அதிகமான ‘ஓவர்டோஸ்’ (Overdose) நிலையை ஏற்படுத்தி உடலின் வெப்பநிலையைக் கண்மூடித்தனமாக உயர்த்தி உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் விவரித்துள்ளனர்.

நெதர்லாந்தில் எக்ஸ்டசி பயன்பாடு சட்டவிரோதம் என்றாலும், இரவு விடுதிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக இதுவரை இந்த மாத்திரையை உட்கொண்டு தீவிர பாதிப்போ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை என்றாலும், உயிர் ஆபத்தைத் தவிர்க்கும் பொருட்டு இந்த டிரம்ப் வடிவ மாத்திரைகள் குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.