Posted in

அரக்கோணம் அருகே தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு; குடும்ப நெருக்கடி கோணத்தில் விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மங்கம்மாபேட்டை பகுதியில், தனது இரண்டு சிறு மகன்களுடன் இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளி (27) என்ற அந்த இளம்பெண், தனது மகன்களான பாரத் (7) மற்றும் சந்தோஷ் (3) ஆகியோருடன் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடப்பதைப் போலச் சென்று, அவ்வழியாக வந்த ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளியும் அவரது கணவர் கோட்டையாவும் ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல் கொத்தும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். பிழைப்பிற்காக அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதிக்குக் குடிபெயர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் கோட்டையா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி கடும் நிதி நெருக்கடியில் வள்ளி தவித்து வந்துள்ளார்.
கணவரை இழந்து இரண்டு சிறு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த வள்ளிக்கு வறுமை மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்துள்ளன. இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் சென்னை சென்ட்ரல் – திருச்சானூர் செல்லக்கூடிய புறநகர் ரயில் வந்தபோது, தனது இரு மகன்களையும் அணைத்துக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் பாய்ந்துள்ளார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று, உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை காரணமாகத் தாய் தன் இரண்டு குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எண்ணம் எழுந்தால் உதவிக்கு: தமிழ்நாடு அரசு ஹெல்ப்லைன் – 104, சினேகா தற்கொலை தடுப்பு மையம் – 044 24640050, டெலி-மானஸ் – 14416)