தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரான தாரகை கற்பகம், ஆளுங்கட்சி வரிசையிலிருந்து திடீரென எதிர்க்கட்சிகளுக்கான முதலாவது வரிசைக்கு இடம் மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாமக குழுத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு அருகில் எதிர்க்கட்சி வரிசையில் அவர் அமர்ந்திருந்த காட்சிகள் பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தின.
கடந்த மாதம் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தாரகை கற்பகம், அதுவரை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கான வரிசையிலேயே அமர்ந்து வந்த நிலையில், திடீரென எதிர்க்கட்சி வரிசைக்கு மாறியது தவெக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கன்னியாகுமரியில் பேசுகையில், “எங்களுக்குக் கட்சியே முக்கியம்; கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்” எனக் கூறியிருந்த பின்னணியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த இடமாற்றம் குறித்துத் தாரகை கற்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றக் குழு தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ இருக்கையை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்றே அனுமதி கிடைத்ததால், முறைப்படி ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததாகவும், இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காங்கிரஸ் அமைச்சரின் அதிரடிப் பேச்சு வெளியான மறுநாளே காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் இடமாறி அமர்ந்தது, கூட்டணிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைத் தவெக தலைமைக்கு மறைமுகமாக உணர்த்தும் ஒரு நகர்வா என அரசியல் ஆய்வாளர்கள் விவாதித்து வருகின்றனர். இச்சம்பவம் சட்டப்பேரவை வளாகத்திலும் தமிழக அரசியலிலும் தற்போதைய முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.