Posted in

செப்டம்பர் 1 முதல் சம்பள உயர்வு: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு அளித்து அரசு உத்தரவு!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகளின் ஊழியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அது அமலுக்கு வருகிறது என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த டாஸ்மாக் பணியாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வின் மூலம், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் உதவி விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ரூ.14,340-லிருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.15,530-லிருந்து ரூ.19,413 ஆகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல், மேற்பார்வையாளர்களின் மாத ஊதியம் ரூ.17,850-லிருந்து ரூ.22,313 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்கள் நேரடியாகப் பலனடைவர்.
இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மதுபானப் பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விடக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாகப் புகார்கள் எழுவதைத் தடுக்கவே இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், மீறி வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 23,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.