Posted in

பிரிட்டன் மீது தாக்குதல் நடத்தப்படுமா? “அது இராணுவ ரகசியம்!” எனச் சிரித்தபடி கெத்து காட்டிய புடின்!

உக்ரைனுக்கு ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் மற்றும் போர்க்கருவிகளை வழங்கி வரும் பிரிட்டன் நாட்டின் இராணுவத் தொழிற்சாலைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நக்கலான புன்னகையுடன் “அது ஒரு இராணுவ ரகசியம்” எனத் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் பிரிட்டனின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் மண்ணில் உள்ள பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை ரஷ்யா இலக்கு வைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த இந்தத் புதிரான பதில் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் புடின், உக்ரைன் எல்லைக்குள் அமைக்கப்படும் பிரிட்டிஷ் இராணுவ வசதிகள் அல்லது தளவாடப் பிரிவுகள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் ரஷ்ய ராணுவத்தின் நியாயமான தாக்குதல் இலக்குகளே என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், பிரிட்டன் நாட்டிற்குள்ளேயே அமைந்திருக்கும் தளவாட உற்பத்தி நிலையங்களைத் தாக்குவது குறித்த கேள்விக்குத் துல்லியமான பதிலை அளிக்க மறுத்து, அதைத் தங்களின் இராணுவ ரகசியமாகவே வைத்திருப்பதாகக் கூறினார்.
முன்னதாக, உக்ரைனுக்குத் தங்களது ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm Shadow) ஏவுகணைகளைத் தயாரிக்கத் தேவையான அதிநவீன தொழில்நுட்ப வரைபடங்களை வழங்க பிரிட்டன் பிரதமர் ஒப்புதல் அளித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், “பிரிட்டன் நேரடியாகப் போரில் பங்கேற்கும் எல்லைக்கு அருகில் வந்துவிட்டது. பிரிட்டனின் இராணுவத் தளங்கள் உக்ரைனுக்குள் இருந்தாலும் சரி, அதற்கு அப்பால் பிரிட்டன் மண்ணில் இருந்தாலும் சரி, எங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்” என எச்சரித்திருந்தது.
பிரிட்டன் வழங்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், ஐரோப்பாவ முழுவதும் உள்ள முக்கிய ஆயுதக் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகளில் தொடர்ச்சியாக விவரிக்க முடியாத தீவிபத்துகளும் நாசவேலைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், புடினின் இந்த “இராணுவ ரகசியம்” என்ற பதில், ரஷ்யா மறைமுகமாக பிரிட்டன் மண்ணில் நாசவேலைகள் அல்லது தாக்குதல்களை நடத்தத் திட்டமிடுகிறதா என்ற அச்சத்தை நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளிடையே உயர்த்தியுள்ளது.