Posted in

விஜய் சார் எங்களை நேரில் பார்க்கணும் – 14-வது நாளாக நீடிக்கும் சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை வளாகம் அருகே மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்ச்சியாக 14-வது நாளை எட்டியுள்ளது. ‘உழைப்போர் உரிமை இயக்கம்’ (UUI) தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்களுக்கான நீதியை வலியுறுத்தித் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களைக் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட நாளாந்த ஊதியமான ₹832-ஐ உடனடியாக உயர்த்திக் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமன்றி, பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, மற்றும் வாராந்திர ஊதியத்துடன் கூடிய விடுமுறை ஆகிய அடிப்படை உரிமைகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“கடந்த ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் சார், தற்போது முதலமைச்சரான பிறகு எங்களது நியாயமான கோரிக்கைகளைக் கேட்க மறுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள தூய்மைப் பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் நேரடியாக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து முறையிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். “விஜய் சார் எங்களை நேரில் வந்து பார்த்தே ஆக வேண்டும்” எனக் கண்ணீர்மல்கக் கூறிய தொழிலாளர்கள், சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கப்படும் வரை போராட்டம் ஓயாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்துச் சட்டப்பேரவையிலும் காரசார விவாதங்கள் எழுந்தன. அரசுத் தரப்பில் பேசிய அமைச்சர்கள், தூய்மைப் பணியாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், சுமுகத் தீர்வு காணத் தகுந்த நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முதலமைச்சருடனான நேரடிச் சந்திப்பு உறுதி செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளதால் சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு நீடிக்கிறது.