Posted in

2029-ல் விஜய்தான் பிரதமர் வேட்பாளரா? – தவெக எம்.எல்.ஏ பேச்சுக்கு அமைச்சர் வெங்கட ரமணன் புது விளக்கம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட ரமணன், “2029 பொதுத்தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது; விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவல்ல” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி, “2029 நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பிரதமர் யார் என்பதை டெல்லி தீர்மானிக்காது; தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள். காங்கிரஸுடன் இணைந்து எங்களது தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவோம்” எனத் தெரிவித்திருந்தார். எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சு தவெக மேலிடத்தின் அனுமதியோடுதான் பேசப்பட்டதா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அமைச்சர் வெங்கட ரமணன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கட ரமணன், “தமிழகத்தில் ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நல்லாட்சியை வழங்கி வரும் முதல்வர் விஜய்யின் ஆட்சி மாடல் இந்தியா முழுமைக்கும் கிடைக்க வேண்டும் என்பது எங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆசையாகும். இருப்பினும், தலைவர் விஜய்யோ அல்லது கட்சியின் தலைமை நிர்வாகிகளோ, அமைச்சர்களோ இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 2029 தேர்தல் குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை சரியான முடிவை எடுக்கும்” என்று விளக்கமளித்தார்.
தற்போது தவெக அரசின் முதன்மை நோக்கம் தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவது மட்டுமே என அவர் சுட்டிக்காட்டினார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முடிவுகளைத் தலைவர் விஜய்யும் பொதுச்செயலாளர் என். ஆனந்தும் இணைந்து தகுந்த நேரத்தில் தீர்மானிப்பார்கள் என்றும், தனிப்பட்ட நிர்வாகிகளின் கருத்துக்களைக் கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.