தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார். “அரரசின் அனைத்துத் திட்டங்களும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால், தனியாக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்வதும் அதன் மீதான விவாதங்களும் எதற்கு?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் நிறைகுறைகள் குறித்து விவாதிக்கப்படும் சூழலில், அதில் இடம்பெறாத புதிய திட்டங்களை விதி 110-ன் கீழ் அறிவிப்பது ஜனநாயக மரபுகளைச் சிதைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பொது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய விதியை, விவாதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தோடு அரசு தவறாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஆகஸ்ட் 17 முதல் தற்போது வரை 110 விதியின் கீழ் சுமார் ₹73,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சீமான், “அனைத்து திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதைக் காட்டவே தவெக அரசு முயல்கிறது” என விமர்சித்தார். ஏற்கனவே மாநிலக் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்புகளுக்கு நிதி எங்கிருந்து பெறப்படும் என்ற தெளிவு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிதி ஆதாரமில்லாத மற்றும் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியின் இந்த தொடர் அறிவிப்புகள் மற்றும் அதற்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் எதிர்ப்புகள் தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.