சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மொத்தம் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களைப் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ் தான் சந்தித்த அசௌகரியம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஆதங்க வீடியோவைத் தொடர்ந்து, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகை லதா ராவிற்கு எதிர்பாராதவிதமாக மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டது. அவசரத்தில் நாப்கின் எடுத்து வரத் தவறிய நிலையில், விமான நிலைய கழிவறைகளில் இருந்த இயந்திரங்கள் செயல்படாததால், முனையத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் சென்று நாப்கின் வாங்க நேரிட்டது. இதனால் விமானத்தைப் பிடிப்பதிலேயே சிக்கல் உருவானதைச் சுட்டிக்காட்டிய லதா ராவ், பன்னாட்டு விமான நிலையத்தில் கழிப்பறைகளில் நாப்கின் இயந்திரங்கள் முடங்கிக் கிடப்பதாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாகப் பொருத்தப்பட்டிருந்த நாப்கின் இயந்திரங்கள் சில பயணிகள் மற்றும் சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே தற்காலிகமாக நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பயணிகளின் உடனடித் தேவையை பூர்த்தி செய்யப் பெண்கள் கழிவறைகளில் பிரத்யேக அவசர எண்கள் ஒட்டப்பட்டு, அழைத்த 2 நிமிடங்களில் பெண் ஊழியர் மூலம் நாப்கின் வழங்கப்படும் தற்காலிக ஏற்பாடும் செய்யப்பட்டது.
இந்நிலையில், இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக சென்னை விமான நிலையத்தில் உள்ள அனைத்துப் பெண்கள் கழிவறைகளிலும் மொத்தம் 36 புதிய நவீன சானிட்டரி நாப்கின் இயந்திரங்களை நிறுவும் பணி தற்போது முடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து புதிய இயந்திரங்களும் முழுமையாகப் பொருத்தப்பட்டு, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பெண் பயணிகளின் பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவரப்படும் என விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை ஒருவர் தைரியமாக எழுப்பிய குரலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பெண் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.