Posted in

இனவெறி வெறியாட்டம் – டக் டேப்பால் இருக்கையில் கட்டப்பட்ட பயணி: விமானத்தில் பரபரப்பு..

அமெரிக்காவின் டாலஸ் நகரிலிருந்து நியூ ஜெர்சி நோக்கிப் பறந்துகொண்டிருந்த ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ (American Airlines) விமானத்தில், சக பயணிகள் மற்றும் பெண் ஊழியரை இனவெறியுடன் தாக்கி அச்சுறுத்தல் ஏற்படுத்திய பயணி ஒருவரை, மற்ற பயணிகள் ‘டக் டேப்’ (Duct Tape) மற்றும் பிளாஸ்டிக் கைவிலங்கைப் பயன்படுத்தி இருக்கையோடு சேர்த்துக் கட்டிப்போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவானில் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவத்தால் விமானம் உடனடியாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘விமானம் 618’ வான்வெளியில் பறந்துகொண்டிருந்த போது, அரிசோனாவைச் சேர்ந்த ஆர்தர் லண்டீன் (67) என்ற பயணி திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷமாகப் பேசத் தொடங்கினார். விமானப் பணிப்பெண்ணை நோக்கி இனவெறி மற்றும் அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசி அச்சுறுத்திய அவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பயணியைக் கடுமையாகத் தாக்கி, அவரது லேப்டாப்பையும் சேதப்படுத்தினார். மேலும், தடுக்க வந்த பெண்ணையும் தாக்கி விமானத்திற்குள் பெரும் ரகளையில் ஈடுபட்டார்.

பயணியின் வன்முறை வெறியாட்டம் அதிகரித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜுவான் மெஜியா மற்றும் சக பயணி ரிச்சர்ட் ஓலெனிக் ஆகியோர் உடனடியாகக் களமிறங்கினர். விமான ஊழியர்கள் வழங்கிய பிளாஸ்டிக் கைவிலங்கு மற்றும் பிசின் நாடாவை (Duct Tape) பயன்படுத்தி, அந்த நபரின் கைகள் மற்றும் உடலை இருக்கையோடு இறுக்கமாகக் கட்டிப் போட்டனர். கட்டுப்படுத்த முயன்றபோது அந்த நபர் முன்னாள் காவல் அதிகாரியைக் கடிக்க முயன்றதாகவும், இருப்பினும் அவரது மூச்சுத்திணறலைத் தவிர்க்க வாயில் டேப் ஒட்டாமல் உடலை மட்டும் கட்டிப்போட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தயார் நிலையில் இருந்த போலீசார் விமானத்திற்குள் நுழைந்து, இருக்கையில் கட்டப்பட்டிருந்த ஆர்தர் லண்டீனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். வான்வெளியில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றத்திற்காக அந்த நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து அமெரிக்கக் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் எஃப்.பி.ஐ (FBI) ஏஜென்சி தீவிர விசாரணை நடத்தி வருகிறது.