அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கமான பொன்னிற பாப் ஹேர்ஸ்டைலை விடுத்து, முற்றிலும் மாறுபட்ட நிறம் மற்றும் வடிவமைப்புடன் கூடிய புதிய ஹேர்ஸ்டைலில் பொதுவெளியில் தோன்றியதைத் தொடர்ந்து, ‘எக்ஸ்’ (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்களும் கேலிகளுமாக இணையமே போர்க்களமாக மாறியுள்ளது.
சமீபத்தில் வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் நடைபெற்ற விருந்திலும், அதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்ற அதிபர் டொனால்ட் டிரம்ப், அடர்த்தியான மற்றும் புதிய வண்ணத்திலான தலைமுடியுடன் காட்சியளித்தார். இதனைப் பார்த்த எக்ஸ் சமூக வலைத்தளப் பயனர்கள், “டிரம்ப் புதிய ‘விக்’ (Wig) அணிந்துள்ளாரா?” என்றும், “அவரது தலைமுடி உருகி வழிவது போல் இருக்கிறது” என்றும் கிண்டலான பதிவுகளைப் பறக்கவிட்டு வருகின்றனர். மேலும், பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்ஃபோர்டு பாணியில் தோற்றமளிக்க டிரம்ப் முயல்வதாகப் பலரும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், தான் ‘விக்’ எதுவும் அணியவில்லை எனக் காரசாரமாக மறுத்துள்ள டிரம்ப், “கடந்த 2024 தேர்தல் பிரசாரத்தின் போது ஓஹியோவில் பலத்த புயல் வீசியபோதே நான் விக் வைக்கவில்லை என்பது அனைவருக்கும் நிருபணமாகிவிட்டது” எனக் நகைச்சுவையாக விளக்கம் அளித்துள்ளார். மற்றொருபுறம், டிரம்பின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், “டிரம்ப் வயதாவதற்கு மாறாக இளமையாகிக் கொண்டே போகிறார்; அவரது புதிய ஹேர்ஸ்டைல் மிகவும் கம்பீரமாக உள்ளது” எனப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபரின் தனிப்பட்ட மருத்துவர், டிரம்பிற்குத் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்த நிலவரத்தில், தற்போது டிரம்பின் இந்தத் திடீர் ஹேர்ஸ்டைல் மாற்றம் உலகளவில் இணையவாசிகள் மத்தியில் புதிய டிரெண்டிங் விவாதப் பொருளாகவும் மீம்ஸ் திருவிழாவாகவும் உருவெடுத்துள்ளது.