கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற புகழ்பெற்ற கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விட்டல பிண்டி திருவிழாக் கொண்டாட்டத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ‘தளபதி’ விஜய் ஆகியோரைப் போலவே அச்சு அசலாகத் தோற்றமளிக்கும் இரு நபர்கள் (Lookalikes) தற்செயலாக நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட சுவாரசியமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோலாகலமாக நடைபெற்ற உடுப்பி கிருஷ்ண ஜெயந்தி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது, தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யைப் போல அச்சு அசலாக ஆடை, ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றத்துடன் கூடிய நபர் ஒருவர் பாதுகாவலர்களுடன் கூட்டத்திற்குள் நடந்து வந்தார். அதே வழியில், பிரதமர் நரேந்திர மோடியின் தோற்றத்தைக் கொண்ட சதானந்த நாயக் என்பவரும் நடந்துவர, இருவரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
இருவரையும் ஒரே இடத்தில் பார்த்த பொதுமக்கள், நிஜமாகவே பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் விஜய்யும் நேரில் சந்தித்துக் கொள்கிறார்களோ என எண்ணிச் சில நொடிகள் திகைத்துப் போயினர். பின்னர் இருவரும் கை குலுக்கி, கட்டிப்பிடித்துக் கொண்டு, செல்பிக்கள் எடுத்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர். விஜய் போலத் தோற்றமளித்த நபர் ‘மோடி’ போலியிடம் ரகசியமாக ஏதோ கூறிச் சிரிக்க, அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து இந்த அரிய தருணத்தை நெகிழ்ச்சியுடன் ரசித்தனர்.
“Modi Meets CM Vijay… Udupi Edition” என்ற தலைப்பில் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துப் பகிர்ந்து வருகின்றனர். கர்நாடகா மற்றும் உடுப்பியில் நடிகர் விஜய்க்குத் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், பாரம்பரிய விழாவில் அரங்கேறிய இந்த ‘டூப்ளிகேட் தலைவர்கள்’ சந்திப்பு, திருவிழாவிற்கு வந்த மக்களுக்கு கூடுதல் கொண்டாட்டத்தையும் பொழுதுபோக்கையும் கொடுத்துள்ளது.