Posted in

ரகசிய பேச்சுவார்த்தையில் ரஷ்யா–அமெரிக்கா! உக்ரைன் போரை முடிக்க 3 மணி நேர ஆலோசனை

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இடையே மாஸ்கோவில் நடைபெற்ற 3 மணி நேரத்திற்கும் அதிகமான உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், அமைதித் தீர்வுக்கான சாத்தியமான வழிகள் மற்றும் புதிய யோசனைகள் விவாதிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோவிற்கு நேரில் சென்று அதிபர் புடினைச் சந்தத்துப் பேசினர். இச்சந்திப்பின் போது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பல புதிய திட்டங்களையும் யோசனைகளையும் அமெரிக்கத் தூதர்கள் முன்வைத்ததாகப் புடினின் மூத்த ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மிகவும் திறந்த மனதுடனும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இருதரப்பிற்கும் இடையே பயனுள்ள உரையாடல் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதற்காக மாஸ்கோ மற்றும் கிய்வ் நகரங்கள் மீது பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்டு வந்த வான்வழித் தாக்குதல்களை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புடினும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியும் ஒப்புக்கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது, ரஷ்ய ராணுவம் களத்தில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் போருக்கான மூலக் காரணங்களை முழுமையாகக் களைய வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் புடின் விரிவாக எடுத்துக் உரைத்துள்ளார்.

மாஸ்கோ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசுவதற்காகக் கிய்வ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ரஷ்யாவின் முதன்மை நிலைப்பாடுகளையும் புடினின் கருத்துகளையும் ஸெலென்ஸ்கியிடம் அவர்கள் சமர்ப்பிக்க உள்ள நிலையில், இந்த தொடர் தூதரக முயற்சிகள் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் போரில் ஒரு தீர்க்கமான திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.