ஜெர்மனியின் முக்கிய லைப்சிக் (Leipzig/Halle) விமான நிலையத்தில் உக்ரைனிய சரக்கு விமானத்தின் அருகே வெடிமருந்துகளுடன் கண்டெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என பெர்லின் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, “ஜெர்மனி மீண்டும் ஒரு போரைத் தொடங்க விரும்புகிறது” என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் லைப்சிக் விமான நிலையத்தில் வெடிமருந்துகளுடன் கூடிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விரிவான விசாரணைக்குப் பிறகு, இந்த “ஹைப்ரிட்” (Hybrid Warfare) தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய உளவு அமைப்புகள் இருப்பதாக ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக, போன் (Bonn) நகரில் உள்ள ரஷ்யத் தூதரகத்தை மூட உத்தரவிட்ட ஜெர்மனி அரசு, பெர்லினில் உள்ள ‘ரஷ்யன் ஹவுஸ்’ பண்பாட்டு மையத்துடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
ஜெர்மனியின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பதிலளித்துப் பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “ஜெர்மனியின் இந்தக் குற்றச்சாட்டுகளும் தூதரக வெளியேற்றமும் ஒரு உண்மையான போரின் தொடக்கமாகும்” என எச்சரித்தார். மேலும், “இரண்டாம் உலகப்போருக்கு முன்பிருந்த சூழலை நினைவூட்டும் வகையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக ஜெர்மனியை மாற்ற நினைக்கும் அதிபர் ஃபிரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) மறைமுகமாக எங்கள் மீது போரைப் பிரகடனம் செய்கிறார்; ஜெர்மனி மீண்டும் போரை விரும்புகிறது” என அவர் குற்றம்சாட்டினார்.
ஜெர்மனியின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நேட்டோ (NATO) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெர்லினுக்குத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகி வரும் நிலையில், ரஷ்ய அரசு இதற்கு உரியப் பதிலடி கொடுக்கும் என லாவ்ரோவ் எச்சரித்துள்ளதால் ரஷ்யா-ஜெர்மனி இடையிலான தூதரக உறவு வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது.