Posted in

மாறுகிறது உலக வரைபடம் – ஆப்பிரிக்கா இனி மிகப்பெரியது; அமெரிக்கா, ஐரோப்பாவின் அளவு சுருக்கம்

கடந்த 16-ஆம் நூற்றாண்டு முதல் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்த ‘மெர்கேட்டர்’ (Mercator) வரைபட முறைக்கு விடை கொடுத்துவிட்டு, கண்டங்களின் உண்மை அளவை மிகத் துல்லியமாகக் காட்டும் ‘ஈக்வல் எர்த்’ (Equal Earth) என்ற புதிய உலக வரைபடத்தை ஏற்றுக்கொள்வதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. இந்த வரலாற்று முடிவின் மூலம், நிலப்பரப்பில் ஆப்பிரிக்க கண்டம் மிகப்பெரியதாகக் காட்சி அளிக்கும் அதேவேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விசுவல் அளவு கணிசமாகக் குறையும்.

டோகோ (Togo) நாடு மற்றும் ஆப்பிரிக்க யூனியன் ஒருங்கிணைத்து நடத்திய ‘#CorrectTheMap’ பிரச்சாரத்தின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட 164 நாடுகள் வாக்களித்தன. 1569-இல் மாலுமிகளுக்காகக் உருவாக்கப்பட்ட பழைய வரைபடத்தில் நிலநடுக்கோட்டுப் பகுதியான ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா மிகச் சிறியதாகவும், கிரீன்லாந்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை அவற்றின் உண்மையான அளவை விட மிக பிரம்மாண்டமாகவும் காட்டப்பட்டு வந்தன. உதாரணத்திற்கு, ஆப்பிரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்து, பழைய வரைபடத்தில் ஆப்பிரிக்காவிற்குச் சமமான அளவில் காட்டப்பட்டு வந்தது.

புதிய ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தில், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கூட்டினாலும் எஞ்சியிருக்கும் அளவிற்கு ஆப்பிரிக்க கண்டத்தின் உண்மையான பிரம்மாண்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடத் தொழில்நுட்பங்களில் இந்த புதிய முறையைப் பயன்படுத்த ஐநா வலியுறுத்தியுள்ளது. “வரைபடங்கள் ஒருபோதும் நடுநிலையானவை அல்ல; தவறான வரைபடம் உலக நாடுகளைப் பற்றிய தவறான பார்வையைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்துகிறது” எனத் டோகோ வெளியுறவு அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஐநாவின் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடான அமெரிக்கா, “உலகில் நிலவும் உண்மையான மற்றும் தீவிரமான பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், 16-ஆம் நூற்றாண்டு வரைபட திட்டங்களைப் பற்றிப் பேசுவது ஐநாவின் நம்பகத்தன்மையைக் குறைக்கும் செயல்” எனக் விமர்சித்துள்ளது. இருப்பினும், பிரான்ஸ் அரசு தனது பள்ளிகளில் பழைய வரைபடப் பயன்பாட்டைத் உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளதுடன், இந்த மாற்றம் உலகளவில் புவிசார் அரசியல் மற்றும் கல்வித் துறையில் புதிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.