Posted in

எரியும் காரில் இருந்து மீட்கப்பட்ட அதிசயம் – தீப்பிழம்பில் சிக்கிய பிரிட்டன் வீரரின் உயிரைக் காப்பாற்றிய நெதர்லாந்து வீரர்!

சீனா ஜிடி சாம்பியன்ஷிப் (China GT Championship) பந்தயத்தின் போது, பந்தயக் கார் ஒன்று தீப்பிழம்பாக மாறி வெடித்த கொடூர விபத்தில் சிக்கிய பிரிட்டன் வீரர் ஆலி மில்ராயை (Ollie Millroy), அவரது சக போட்டியாளரான நெதர்லாந்தின் லூக் ஹார்டாக் (Loek Hartog) தனது சொந்த உயிரைப் பணையம் வைத்து மீட்டுள்ளார்.

ஷாங்காய் சர்வதேச பந்தயப் பாதையில் நடைபெற்ற பந்தயத்தின் 7-வது சுற்றின் போது, பிரிட்டனின் 36 வயதான பந்தய வீரர் ஆலி மில்ராய் ஓட்டிச் சென்ற ஃபெராரி (Ferrari) கார் மற்ற இரு கார்களுடன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய அடுத்த சில வினாடிகளிலேயே கார் பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்துப் பெருந்தீப் பிழம்பாக மாறியது. அப்போது பாதுகாப்புப் பணியாளர்களோ அல்லது தீயணைப்பு வீரர்களோ உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது தனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது இளம் வீரர் லூக் ஹார்டாக், பந்தயத்தை உடனடியாக நிறுத்திவிட்டு எரியும் காரை நோக்கி ஓடிச் சென்றார். அங்கிருந்த தீயணைப்புக் கருவியை எடுத்துத் தீயைக் கட்டுப்படுத்த முயன்ற அவர், கதவின் ஒரு பகுதியை உடைத்து, படுகாயமடைந்திருந்த மில்ராயை எரியும் காரிலிருந்து துணிச்சலாக வெளியே இழுத்து வந்து உயிரைக் காப்பாற்றினார்.

விலா எலும்பு முறிவு, தோள்பட்டை எலும்பு முறிவு மற்றும் நுரையீரல் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆலி மில்ராய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் லூக் தான்; அவர்தான் எனது குழந்தைகளின் பார்வையில் உலகின் மிகப்பெரிய சூப்பர் ஹீரோ” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். பந்தயப் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குளறுபடியாக இருந்ததாகக் விமர்சனங்கள் எழுந்த நிலையில், போட்டிக் அமைப்பாளர்கள் இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.