Posted in

 தாக்குதல் பற்றி ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்ததா? செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது நெதன்யாகு அதிரடி!

அக்டோபர் 7 பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகப் பொய்ச் செய்தி வெளியிட்டதாகக் கூறி, நாட்டின் பிரபல ‘ஹாரெட்ஸ்’ (Haaretz) நாளிதழ் மற்றும் அதன் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்குத் தொடர உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

2023 அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஒன்றரை வாரத்திற்கு முன்பே, ஹமாஸின் தாக்குதல் திட்டம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத், தொலைபேசி வாயிலாக நெதன்யாகுவை நேரடியாக எச்சரித்ததாக ஹாரெட்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தத் தகவலைப் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தெரிவிக்காமல் நெதன்யாகு அலட்சியமாக விட்டுவிட்டார் என்று அந்த செய்திக் கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை முற்றிலுமாக மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், 2023 செப்டம்பர் தொடக்கத்திலிருந்து அக்டோபர் 7 வரை அமீரக அதிபருக்கும் நெதன்யாகுவிற்கும் இடையே எந்தவொரு உரையாடலும் நடைபெறவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கான எந்தவொரு அழைப்புப் பதிவுகளோ (Call Logs) அல்லது அமீரக அதிகாரிகளின் வருகைப் பதிவுகளோ பிரதமர் அலுவலகக் கோப்புகளில் இல்லை என்றும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதிடையே, வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இடதுசாரிகள் பரப்பும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரமே இது என்றும், தவறான செய்தி வெளியிட்ட ஹாரெட்ஸ் நாளிதழ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு 1 மில்லியன் ஷேகெல்ஸ் இழப்பீடு வழங்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு சந்திக்க நேரிடும் என்றும் நெதன்யாகு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இருப்பினும், தங்களின் புலனாய்வு அறிக்கை முற்றிலும் உண்மையானது என்றும் அதில் உறுதியாக இருப்பதாகவும் ஹாரெட்ஸ் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.