Posted in

கர்நாடக காங்கிரஸில் மீண்டும் உள்கட்சிப் பூசல்? – ‘அஹிந்தா’ கார்டை கையில் எடுத்து முதல்வர் சிவக்குமாருக்கு செக் வைக்கும் சித்தராமையா!

கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி மாற்றத்திற்குப் பிறகு காங்கிரஸ் அரசு 100 நாட்களை நிறைவு செய்யவுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீண்டும் ‘அஹிந்தா’ (AHINDA – சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் கூட்டமைப்பு) அரசியலை தீவிரமாகக் கையில் எடுத்திருப்பது ஆளும் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வரும் சூழலில், சித்தராமையா தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான 75 சதவீத இடஒதுக்கீடு மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு அமலாக்கம் குறித்தக் கோரிக்கைகளை மீண்டும் எழுப்பியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார்.

வோக்கலிக சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் 2028 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகளைத் தொடங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியான ‘அஹிந்தா’ தளம் இன்னமும் தனது கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பதை உணர்த்தவே சித்தராமையா இத்தகைய நகர்வுகளை மேற்கொள்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதில் சிவக்குமார் தயக்கம் காட்டி வரும் நிலையில், அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சித்தராமையா வலியுறுத்துவது அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

2028 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தாலும், கட்சியில் தனது ஆதரவாளர்களுக்கான முக்கியத்துவத்தையும், சமூக நீதி அரசியலில் தனது ஆதிக்கத்தையும் தக்கவைத்துக்கொள்ளவே சித்தராமையா முயல்வதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் ஆட்சி சீராகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், தலைவர்களிடையே உருவாகியுள்ள இந்த உள்கட்சி அரசியல் மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் காங்கிரஸ் மேலிடத்திற்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.