மத்தியத் தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரத்தின் தொழில் வளம் மற்றும் ஏற்றுமதியை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தும் வகையில், அங்கு ‘மல்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் ஹப்’ (உள்நாட்டு கொள்கலன் முனையம் – Inland Container Depot) அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு அதிரடியாகத் தொடங்கியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் மாதம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், திருச்சியில் மல்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் விரைவில் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் (Detailed Feasibility Study) தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவுள்ளதாக முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார். சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற முக்கியத் துறைமுகங்களுக்குச் சமமான தொலைவில் திருச்சி அமைந்துள்ளதால், இத்திட்டம் அமைந்தால் திருச்சி மண்டலத்தின் தொழில் மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவில் அதிகரிக்கும்.
இத்திட்டம் சாத்தியமாவதற்குக் காரணமாக இருந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துச் சமர்ப்பித்த விரிவான கோரிக்கை மனுக்களே இதன் பின்னணியாக அமைந்தன. திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கம், திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிப்பது, மணப்பாறையில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பது மற்றும் மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு எனப் பல கோரிக்கைகளைத் துரை வைகோ தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
மத்திய அரசுடனான ஆக்கபூர்வமான தொடர்புகள் மூலம் இந்த மெகா திட்டத்தைக் கொண்டுவரத் துரை வைகோ தீவிரமாக முயன்ற நிலையில், முதலமைச்சர் விஜய்யும் இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது திருச்சி மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகளின் கூட்டு முயற்சியால் இத்திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.