Posted in

பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டவிடமாட்டோம் – அரசின் முடிவுக்கு சீமான் கடும் எதிர்ப்பு!

சென்னை பட்டினம்பாக்கத்தில் ₹1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், மீறினால் பாதிக்கப்பட்ட 9 மீனவ கிராம மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசிற்குப் பல லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை நிலவி வரும் சூழலில், சுமார் ₹120 கோடிக்கு மேல் செலவிட்டு அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள குறுகிய சாலைகள் காரணமாக ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதைச் சுட்டிக்காட்டினார். இங்குத் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் என்பதால், அப்பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரலையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆபத்தான பகுதிகளில் பட்டினம்பாக்கமும் ஒன்று என நினைவுகூர்ந்த சீமான், எதிர்காலத்தில் கடல்சார் பேரிடர்கள் ஏற்பட்டால் இந்தப் புதிய வளாகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி, இப்பகுதியில் பரம்பரையாக வாழ்ந்து வரும் 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரமும் மீன்பிடி உரிமைகளும் இதனால் முற்றிலும் பறிபோகும் நிலை ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

எனவே, பட்டினம்பாக்கம் மீனவ மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சி களத்தில் நின்று போராடும் என்றும் சீமான் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். புதிய தலைமைச் செயலக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளும் மீனவ அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இப் பிரச்சனை சென்னை அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.