ரஷ்யாவின் சமாரா (Samara) பிராந்தியத்தின் மீது உக்ரைன் நடத்திய பிரம்மாண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைனின் கருங்கடல் துறைமுகத்தில் நின்றிருந்த சரக்குக் கப்பல்கள் மற்றும் நாட்டின் பிரதான எஃகு உற்பத்தி ஆலைகள் மீது ரஷ்யப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
முன்னதாக, ரஷ்யாவில் ஏவுகணை உற்பத்திக்குப் பயன்படும் செயற்கை ரப்பர் மற்றும் எரிபொருள் சேர்க்கைகளைத் தயாரிக்கும் ‘டோக்லியாட்டி காவுச்சுக்’ (Togliattikauchuk) ஆலை மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உக்ரைனின் சோமோர்க்ஸ் (Chornomorsk) கருங்கடல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு வணிகச் சரக்குக் கப்பல்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திச் சேதப்படுத்தியுள்ளது.
மேலும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் (Kryvyi Rih) பகுதியில் உள்ள தொழில்துறை வளாகங்கள், சபோரிஜ்ஜியாவில் உள்ள ‘சபோரிஜ்ஸ்டால்’ (Zaporizhstal) எஃகு ஆலை மற்றும் னிப்ரோவில் உள்ள ‘இண்டர்பைப் ஸ்டீல்’ (Interpipe Steel) உற்பத்தி மையங்கள் மீதும் ரஷ்ய ராணுவம் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி அழித்துள்ளது. இந்த வான்வழித் தாக்குதல்களில் தொழில்துறை மையங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனின் ராணுவ உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்பை முடக்குவதை இலக்காகக் கொண்டு ரஷ்யா இந்த வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. மறுபுறம், ஒரே இரவில் 230-க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் உள்கட்டமைப்புகள் மீது நடத்தி வரும் இந்த விசைத் தாக்குதல்கள் உக்ரைன் போரை மேலும் தீவிரமடையச் செய்துள்ளன.