உக்ரைன் மீதான முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியதில் இருந்து இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட (500,000) ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகப் பிரிட்டனின் ராணுவப் படைகளின் தலைமை அதிகாரியான ஏர் சீஃப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் (Sir Richard Knighton) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், போர் களத்தில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்துப் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் உளவுத்துறை சேகரித்த தரவுகளை ரிச்சர்ட் நைட்டன் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். போரில் காயமடைந்தவர்களையும் சேர்த்து ரஷ்யாவின் மொத்த இழப்பு 15 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும், குறிப்பாக 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகே 90 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெறும் 2 சதவீத நிலப்பரப்பைக் கைப்பற்றுவதற்காக இத்தனை லட்சம் வீரர்களின் உயிர்களைப் பலிகொடுத்துள்ள அதிபர் விளாடிமிர் புடினின் நடவடிக்கை அர்த்தமற்றது என்று விமர்சித்த நைட்டன், ரஷ்யாவில் உள்ள 5 லட்சம் வீடுகளின் சுவர்களில் தங்களின் தந்தை, மகன் அல்லது கணவரின் படங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் எனக் கவலை தெரிவித்தார். அத்துடன், 10,000-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள், 3,000 பீரங்கி அமைப்புகள் மற்றும் 370-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் என ரஷ்ய ராணுவம் மாபெரும் ஆயுத இழப்பையும் சந்தித்துள்ளது.
போர் மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா தனது ராணுவ ஆட்பலத்தை அதிகரிக்க மேலும் பல லட்சம் வீரர்களைத் திரட்டத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான தாக்குதல்களால் ரஷ்யப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்துள்ள போதிலும், மாஸ்கோ தனது ராணுவ நடவடிக்கைகளைக் கைவிடுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.