இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகளின் நிறைவாக, கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் பாரத் மண்டபத்தில் பிரம்மாண்ட ‘காலா விருந்து’ (Gala Dinner) அளிக்கப்பட்டது. இந்தியப் பண்பாட்டையும் பாரம்பரியப் சுவைகளையும் வெளிப்படுத்தும் வகையில் முழுமையான சைவ உணவுகள் அடங்கிய சிறப்பு மெனு இந்த விருந்தில் பரிமாறப்பட்டது.
தொடக்க உணவாக குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற ‘கான்ட்வி மில்லே-ஃபுய்லே’ (Khandvi Mille-Feuille) மற்றும் காளான்களால் செய்யப்பட்ட ‘கும்ப் கலௌட்டி’ கபாப் ஆகியவை வழங்கப்பட்டன. முதன்மை உணவில் இமயமலைப் பகுதியின் அரிய வகை காளானைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘குச்சி மார்மிக்’, பன்னீர் லபாப்தார், சிறுதானிய புலாவ், தக்காளி பருப்பு சாறு மற்றும் தென்னிந்திய சுவையில் தயாரிக்கப்பட்ட ‘கேரட் பீன்ஸ் பொரியல்’ ஆகியவை விருந்தினர்களின் நாவிற்கு விருந்தளித்தன.
மேலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறுக்கு, மகாராஷ்டிராவின் பாக்கர்வாடி, ராஜஸ்தானின் மினி கச்சோரி, காஷ்மீர் வால்நட் மற்றும் பழைய டெல்லியின் மைதா காஜு போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பலகாரங்களும் சிற்றுண்டிகளும் இந்த மெனுவில் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் சிறுதானிய உணவுப் பெருமையை உலகளவில் ஊக்குவிக்கும் வகையில் ராகி, கம்பு மற்றும் தினை கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்பு உணவுகளும் இதில் முதன்மை பெற்றன.
விருந்தின் நிறைவாக பழைய டெல்லி ஸ்டைல் ஃபிரூட் கிரீம் உடன் கூடிய மொறுமொறுப்பான ஜிலேபி மற்றும் தங்கம் மற்றும் முல்பெர்ரி பழங்கள் அலங்கரிக்கப்பட்ட ‘ஷாஹ்தூத் பிர்னி’ (Shahtoot Phirni) ஆகிய இனிப்புகள் பரிமாறப்பட்டன. இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் உணவுப் பாரம்பரியத்தை உலகத் தலைவர்கள் மத்தியில் பறைசாற்றும் வகையில் இந்த அரச விருந்து மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டது.