Posted in

முதியோர் ஓய்வூதியம் தாமதம் ஏன்? – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய விளக்கம்!

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் முதியோர் ஓய்வூதியத் தொகை வங்கி கணக்குகளில் வரவு வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் எழுந்த கவலைகளுக்குத் தமிழ்நாடு அரசு விரிவான விளக்கம் அளித்துள்ளது.

மாநிலத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் என மொத்தம் 35.37 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் 12 வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் மாநில அரசின் நிதியில் பயன்பெறும் 15.56 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான ஓய்வூதியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டு விட்டதாக அரசு தெரிவித்து உள்ளது.

அதேவேளையில், மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் உட்பட 3 பிரதான திட்டங்களின் கீழ் பயன்பெறும் 19.20 லட்சம் பயனாளிகளுக்கு இம்மாசம் முதல் ‘SNA-SPARSH’ என்ற புதிய நிதிப் பரிவர்த்தனை தளம் மூலமாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பட்டியல் தயாரிக்கப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், செப்டம்பர் 11 முதல் 14 வரை மத்திய அரசு அலுவலகங்களுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் ஒப்புதல் பெறுவதில் தற்காலிகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களின் தொடர் விடுமுறை காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 14-க்குப் பிறகு ஒப்புதல் பெறப்பட்டு அனைத்துப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளிலும் ஓய்வூதியத் தொகை விரைவாக வரவு வைக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது. எனவே ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவது குறித்து பயனாளிகள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனத் வருவாய்த்துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.