லண்டனில் உள்ள தனது குடியிருப்பில் வசித்து வந்த மூத்த அமெரிக்க ராஜதந்திர அதிகாரி ஒருவரை, பிரிட்டன் காவல் துறைக்குத் தெரியாமல் அதிகாலை நேரத்தில் அமெரிக்க அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றி ராணுவ சரக்கு விமானம் மூலம் ரகசியமாகத் தாய்நாட்டிற்கு அழைத்துச் சென்ற சம்பவம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே கடும் இராஜதந்திரக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள அமெரிக்க அதிகாரியின் குடியிருப்பில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரிடமிருந்து ஆபாசப் படங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பிரிட்டன் சட்ட அமலாக்கத் துறையினரின் கைகளில் அவர் சிக்காமல் இருப்பதற்காகவும் விசாரணை தீவிரமடைவதைத் தடுப்பதற்காகவும், அவரை அமெரிக்க அதிகாரிகள் லண்டனிலிருந்து அமெரிக்க விமானப்படை தளத்திற்கு அழைத்துச் சென்று உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.
பிரிட்டன் மண்ணில் சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு எந்தவித சட்டப்பூர்வ அதிகாரமும் கிடையாது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ராஜதந்திர விலக்கு (Diplomatic Immunity) இருக்கும் நிலையில், அவரை முறைப்படி ஒப்படைக்குமாறு பிரிட்டன் காவல்துறையிடம் அமெரிக்கா எந்தக் கோரிக்கையும் முன்வைக்கவில்லை. நாட்டின் சட்ட திட்டங்களை மீறி பிரிட்டன் மண்ணில் நடத்தப்பட்ட இந்த ரகசிய ‘கடத்தல் பாணி’ நடவடிக்கை அந்நாட்டுச் சட்ட அமைப்பையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம், தங்கள் நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளும் பிரிட்டன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என அமெரிக்கத் தூதரகத்திடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே லண்டன் காவல்துறையினரும் இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்பில் இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வாஷிங்டன் – லண்டன் இடையேயான இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் பெரும் விரிசலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.