இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுராபயா (Surabaya) நகரத்திலிருந்து தெற்கு கலிமந்தனின் பஞ்சர்மாசின் (Banjarmasin) நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘வெர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற பயணியர் கப்பல், 243 பயணிகளுடன் ஜாவா கடல்பகுதியில் (Java Sea) பயணத்தின் போது திடீரென மாயமாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலில் வீசிய கடும் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாகக் கப்பலுடனான கட்டுப்பாட்டு அறைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை (Basarnas) தெரிவித்து உள்ளது. தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கப்பல் எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கப்பலில் பயணித்த 243 பேரின் நிலையைக் கண்டறியவும், தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்தவும் மீட்புக் குழுவினர் ‘கே.என். எஸ்.ஏ.ஆர் லட்சுமணா 241’ (KN SAR Laksmana 241) என்ற அதிநவீன மீட்புக் கப்பல் மூலம் சிக்னல் கடைசியாகப் பெறப்பட்ட ஜாவா கடல் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். தெற்கு கலிமந்தன் மீட்புப் படைத் தலைவர் புடு சுதாயனா தலைமையிலான அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேஷியாவில் தீவுகளுக்கு இடையேயான போக்குவரத்திற்குப் பெரும்பாலான மக்கள் கப்பல்கள் மற்றும் படகுகளையே நம்பியுள்ளனர். இருப்பினும், பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாதது மற்றும் அடிக்கடி ஏற்படும் மோசமான வானிலை காரணமாக அந்நாட்டுக் கடல் பகுதியில் அடிக்கடி இது போன்ற விபத்துகளும் மர்மக் காணாமற்போதல்களும் தொடர்கதையாகி வருகின்றன.