டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் குடியுரிமை (Immigration) நடைமுறை மீறல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அம்ரித்சாரில் இருந்து டெல்லி வந்து, அங்கிருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்குச் சென்ற மூன்று இத்தாலிய நாட்டுப் பயணிகள், எவ்வித குடியுரிமைச் சோதனையும் மேற்கொள்ளாமல் சர்வதேச விமானத்தில் பயணித்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி அதிகாலை அம்ரித்சாரில் இருந்து ஏர் இந்தியா (AI-1115) விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த சுர்ஜித் சிங், பல்விந்தர் கவுர் மற்றும் குர்தேவ் சிங் ஆகிய மூன்று இத்தாலியக் குடியுரிமை பெற்ற பயணிகள், டெல்லி விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர். பின்னர், அதிகாலை 1:45 மணிக்கு ஜெர்மனிக்குச் சென்ற லுஃப்தான்சா (Lufthansa) நிறுவனத்தின் LH-763 விமானத்தில் எவ்வித குடியுரிமைச் சோதனையும் இன்றி ஏறி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ‘ஹப் அண்ட் ஸ்போக்’ (Hub-and-Spoke) வழித்தட நடைமுறைகளில் ஏற்பட்ட தவறு மற்றும் விமான நிலைய ஊழியர்களின் கவனக்குறைவே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் எனத் தெரிகிறது. பயணிகள் உள்நாட்டுப் பயணப் பிரிவிலிருந்து நேரடியாகச் சர்வதேசப் பரிமாற்றப் பகுதிக்கு (International Transfer Area) தவறாக அழைத்துச் செல்லப்பட்டதால், குடியுரிமைத் துறையின் முதன்மைச் சோதனையை அவர்கள் சந்திக்காமலேயே தப்ப முடிந்தது.
இந்தக் தீவிரப் பாதுகாப்பு மீறல் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் புலனாய்வுப் பணியகம் (IB), குடிவரவுப் பிரிவு மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.