Posted in

அரசியல் சாயம் பூச வேண்டாம் – விஜய் சேதுபதி பேச்சு சர்ச்சைக்கு தனியார் தொலைக்காட்சி விளக்கம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் விஜய் சேதுபதி ‘தலைமைப் பண்பு’ குறித்துப் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அரசியல் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அது குறித்து தொலைக்காட்சி நிர்வாகம் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் போது போட்டியாளரின் செயல்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி, “தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே புரியாமல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிட்டு, பொறுப்புகளும் பிரச்சனைகளும் வரும்போது பழியை எதிரணி மீது போட்டுவிட்டு ஓடுவது லீடருக்கான குவாலிட்டி அல்ல; அது ஏமாற்று வேலை” என விமர்சித்திருந்தார். இந்தப் பேச்சு, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவது போல் இருப்பதாகக் கூறி தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் விவாதப் பொருளாக மாறியதைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் போட்டிச் சூழலுக்கு உட்பட்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. இதில் இடம்பெறும் உரையாடல்களும் கருத்துகளும் நிகழ்ச்சியின் உள்சூழல் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மட்டுமே சார்ந்தவை. நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்த ஒரு தனிநபர், அரசியல் கட்சி, கொள்கை அல்லது சித்தாந்தத்தை விமர்சிப்பதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ இதைக் கருதக்கூடாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், பொழுதுபோக்கு நோக்கத்திற்கு அப்பாற்பட்டு இந்த உரையாடல்களுக்கு அரசியல் சாயம் பூசுவதையோ அல்லது தவறான விளக்கங்களை அளிப்பதையோ தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியின் இந்த விரைவான விளக்கம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை, கடந்த சில நாட்களாக இணையதளங்களில் விஜய் சேதுபதியைச் சுற்றி நிலவி வந்த அரசியல் விவாதங்களுக்கும் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.