மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரிடம், தொலைத்தொடர்புத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து ₹1.28 கோடி பணத்தைச் சுருட்டிய ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) சைபர் மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அதிகாரியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், புதுடெல்லி தொலைத்தொடர்புத் தலைமையகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, அவரது பெயரில் உள்ள தொலைபேசி எண் மூலம் மும்பையில் ஆபாச வீடியோக்கள் மற்றும் நிதி மோசடி அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார். பின்னர், மும்பை குற்றப்பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரி போலப் சீருடையில் வீடியோ காலில் பேசிய மோசடி கும்பல், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி போலி ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி பயமுறுத்தியுள்ளனர்.
அவர் டிஜிட்டல் முறையில் கண்காணிப்பில் (Digital Arrest) வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் வங்கிச் சேமிப்புகள் மற்றும் வைப்புத் தொகைகளை (Fixed Deposits) உடனடிப் பரிசோதனைக்காக அவர்கள் குறிப்பிடும் கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இந்த மிரட்டலுக்குப் பயந்த அதிகாரி, ஆகஸ்ட் கடைசி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரையிலான காலக்கட்டத்தில் சிறு சிறு பரிவர்த்தனைகளாக மொத்தம் ₹1.28 கோடி பணத்தை மோசடி கும்பலின் போலி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
பல்வேறு வங்கிச் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் சொன்னதால் சந்தேகமடைந்த அவரது மனைவி, வெளிநாட்டில் வசிக்கும் தனது மகளுக்குத் தகவல் தெரிவித்த பிறகே இது மிகப்பெரிய ஆன்லைன் மோசடி என்பது தெரியவந்தது. இது குறித்து புனே நகர சைபர் கிரைம் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு நிறுவனங்களோ அல்லது காவல்துறையோ வீடியோ கால் மூலம் யாரையும் டிஜிட்டல் கைது செய்ய முடியாது என்றும், பொதுமக்களும் மூத்த குடிமக்களும் இத்தகைய போலி மிரட்டல் அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும் சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.