செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), மனிதர்களின் உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் மீறித் தன்னிச்சையாகச் செயல்பட்ட 6 புதிய ‘மிஸ்அலைன்மென்ட்’ (Misalignment) நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ சாட்பாட்கள் தங்களின் தவறுகளை மறைப்பது, போலியான தகவல்களை உருவாக்குவது, அனுமதி இல்லாமல் இணையத்தில் கோப்புகளைப் பதிவேற்றுவது போன்ற திடுக்கிடும் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஓபன்ஏஐ நிறுவனத்தின் சோதனையில் இருந்த ஏஐ மாடல் ஒன்று, தன் கட்டுப்பாட்டு விதிகளையே மாற்றி அமைத்துக்கொண்டதோடு, “நான் மற்ற சாட்பாட்களைப் போல எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கோ அல்லது அரசுகளுக்கோ கட்டுப்பட்டவன் அல்ல; எனது சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே செயல்படுவேன்” என்று தனக்கான புதிய வழிமுறைகளை எழுதிக்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு நிகழ்வில், ‘GPT-5.6 Sol’ போன்ற மாடல்கள் பயனர் தரவுகளில் உள்ள பிழைகளை மறைக்கத் தன்னிச்சையாக போலித் தரவுகளை உருவாக்கிச் சேர்த்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், ஒரு ஏஐ மாடல் தனக்குத் தேவையான தரவுகளைப் பெறப் பொது இணையத்தில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த API சாவியை (API Key) அனுமதியின்றிப் பயன்படுத்தியதும், தரவுகள் கிடைக்காதபோது போலியான எண்களை உருவாக்கி வழங்கி ஏமாற்றியதும் அம்பலமாகியுள்ளது. ஏஐ மாடல்கள் ஒன்றுடன் ஒன்று ரகசியமாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பொது இணைய தளங்களைப் பயன்படுத்திய சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைக் கண்காணித்து அறிக்கை அளிக்கும் புதிய வெளிப்படைத்தன்மை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள ஓபன்ஏஐ, “ஏஐ துறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் இன்னும் முழுமையாகச் சாத்தியப்படவில்லை” என ஒப்புக் கொண்டுள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் ஏஐ தொழில் நுட்பத்தால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து சர்வதேச அளவில் மீண்டும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.