பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகப் பிரம்மாண்ட ரப்பர் படகில் (Mega-dinghy) நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் குடியேறிகள் பிரிட்டன் கரைக்கு வந்து சேர்ந்ததை அடுத்து, கரையில் திரண்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் வன்முறை மோதலில் ஈடுபட்டதில் 6 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியான கென்ட் (Kent) மற்றும் டோவர் (Dover) துறைமுகப் பகுதியை நோக்கி, ஆபத்தான முறையில் அளவுக்கு அதிகமான ஆட்களைச் சுமந்துகொண்டு பிரம்மாண்ட ரப்பர் படகு ஒன்று வந்து இறங்கியது. பிரான்ஸ் எல்லைக் காவல் படையினரின் கண்காணிப்பையும் மீறி இங்கிலாந்து எல்லைக்குள் நுழைந்த இந்தக் குடியேறிகளை பிரிட்டன் எல்லைப் பாதுகாப்புப் படையினர் (Border Force) கரைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது, சட்டவிரோதக் குடியேறிகளின் வருகைக்கு எதிராக அப்பகுதியில் திரண்ட உள்ளூர் எதிர்ப்பாளர்கள் மற்றும் வலதுசாரி அமைப்பினர் கடும் கோஷங்களை எழுப்பினர். நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற இங்கிலாந்து காவல் துறையினருடன் போராட்டக்காரர்கள் கடுமையான வாக்குவாதத்திலும் தாக்குதலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்து வன்முறையில் ஈடுபட்ட 6 பேரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
பிரிட்டன் அரசும் பிரான்ஸ் நிர்வாகமும் ஆங்கிலக் கடற்பகுதியில் சட்டவிரோத மனிதக் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்துள்ள போதிலும், கடத்தல்காரர்கள் பெரிய அளவிலான ஆபத்தான படகுகளைப் பயன்படுத்தி ஆட்களை எல்லை தாண்டுவது தொடர்கதையாகி வருகிறது. இச்சம்பவம் பிரிட்டன் அரசியலில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் தொடர்பான விவாதங்களையும் பொதுமக்கள் மத்தியிலான கொந்தளிப்பையும் மீண்டும் அதிகரிக்கச் செய்துள்ளது.